சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராய நகர், போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதி உட்பட 10-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன. 


லைட் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை, உயர்மட்ட பாதை இன்றி சாலையிலேயே செல்லும் வகையில் அமையவுள்ளது. சாலையோரம் அல்லது மையப்பகுதியில் தண்டவாளம், அமைத்து மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் ரயில் செல்லும் என திட்டவரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்திட்டம் தொடர்பான 2.50 லட்சம் பேரிடம் நேரடியாக கருத்து கேட்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை லைட் மெட்ரோ ரயில் சேவை திட்டம்


சென்னை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளுக்கு தீர்வாக மெட்ரோ உள்ளிட்ட சேவைகள் இருந்தாலும்,  புதிய போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan) தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்தது. அதன்படி,  லைட் மெட்ரோ சேவை உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.  மெட்ரோ என்பது ட்ராம் வண்டியின் நவீன வடிவமாக இருக்கும். தற்போது உள்ள மெட்ரா ரயில் திட்டங்களில் உயர் மட்ட பாதை அமைக்க ஒரு கி.மீ ரூ.200 முதல் ரூ.250 கோடியும், சுரங்கப்பாதை அமைக்க ரூ.500 முதல் ரூ.550 கோடியும் ஆகும். ஆனால், இந்த லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீட்டருக்கு ரூ.100 கோடி தான் ஆகும். எனவே, இந்த மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.


 சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இந்தத் திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.  குறைந்த அளவு காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்படும். மேலும் மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், கொரோனா போன்ற பெருந்தொற்று ஆகிய காலங்களில் எந்தத் தடையும் இன்றி செயல்படும் வகையிலான மீள் திறனுடன் (Resilience) வகையில் இருக்கும். 


சென்னை மெட்ரோ ரயில் சேவை


சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர். நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது.  சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.


மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5/6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.


மெட்ரோ டிக்கெட் சலுகை:


சென்னை மெட்ரோ இரயில் பயணிக்க கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மொபைலில் க்யூ.ஆர். கோட் மூலம் (Mobile QR Code (Single, Return, Group Ticket and Q.R. Trip Passes) டிக்கெட் எடுப்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. மெட்ரோ டிராவல் அட்டைகள் (Metro Travel Cards) மூலம் பயணம் செய்பவர்களுக்கும் பயண கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. 


மெட்ரோ டிராவல் கார்டு:


மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க பயணிகள் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தலாம். ரூ. 50 டெபாசிட் தொகை செலுத்தி (Non Refundable) மெட்ரோ கார்டுகளை பெறலாம். இதில் அதிகபட்ச தொகையாக உங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.