சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் திருநங்கையை குத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலர்களுக்கு இடையே தகராறு
சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த திருநங்கை சுக்ரியா என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் தினந்தோறும் மது அருந்துவதால், சுக்ரியா கார்த்தி உடன் பேசி பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். அடிக்கடி கார்த்தி சுக்ரியா உடன் சண்டையிட்டும் வந்துள்ளார்.
காதலிக்கு வெட்டு
மேலும் கார்த்திக் சுக்ரியாவை நேரில் பார்த்து அவ்வப்பொழுது மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக், சென்னை தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம், வரதராஜபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நின்றிருந்த சுக்கிரியாவை அரிவாளால் முகத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் கூச்சல் சத்தம் கேட்டு சென்ற போது மக்கள் படுகாயம் அடைந்த சுக்ரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு திருநங்கைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றி வளைத்து பிடித்து கைது
சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற காதலன் கார்த்திகை வலை வீசி தேடி வந்தனர். மேலும் கார்த்திக்கின் தொலைபேசி எண்ணை வைத்து அவர் இருக்கும் லொகேஷன் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு சேர்ந்த போலீசார் கார்த்திக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகிடம், சோமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநங்கை காதலியை கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர் கைதாக இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தலைப்பில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: சுக்ரியா மற்றும் கார்த்திக் இருவரும் நண்பர்களாக பழகி காதலித்து வந்துள்ளனர். ஆனால் கார்த்திக் குடித்துவிட்டு சுக்ரியாவை மிக தரக்குறைவாக நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத சுக்கிரியா, கார்த்தி வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு, தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்பொழுது அவரிடம் கார்த்திக் சண்டையிட்டும் வந்து உள்ளார். இந்த நிலையில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற, 15 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.