கொசு ஒழிப்பிற்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறையை பரீட்சார்த்த முறையில் சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. இந்நிலையில், இந்த நடைமுறையால் 90% கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், செலவும் குறைவாக இருப்பதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


சோதனை முயற்சி:


பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழித்தடங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.


சோதனை முயற்சியாக கூவம் ஆறு, ஓட்டேரி நுல்லா, பக்கிங்காம் கால்வாய்ப் பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து 3 ட்ரோன்கள் வாடகைக்குப் பெறப்பட்டன.


இத்திட்டம் குறித்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறும்போது, "கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் பெரும்பாலும், கால்வாய்கள், கூவம் ஆற்றுக் கரைகளில் தான் கொசு மருந்தை தெளிப்பார்கள். ஆனால், நீர்வழித்தடங்களில் மருந்தை தெளிக்க முடியாது. அங்கேதான் கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் ட்ரோன் மூலம் கட்டுப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் எம்எல்ஓ (mosquito larvicidal oil) எனப்படும் கொசுமுட்டை ஒழிப்பு எண்ணெய் தெளிக்கப்படுகிறது. கொசு மருந்து தெளிப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கொசு முட்டைகளின் அளவும், மருந்து தெளித்து 24 மணி நேரத்திற்குப் பின்னர் இருக்கும் மருந்தின் அளவும் தொடர்ச்சியாக 15 நாட்களுக்குக் கண்காணிக்கப்பட்டது.


ஆய்வின் படி கொசுமுட்டையின் அளவு 81% லிருந்து 96% வரை குறைந்துள்ளது. தேனாம்பேட்டை, வளசரவாக்கம் பகுதிகளில் மிக அதிகளவில் காணப்பட்ட கொசு முட்டைகள் மருந்து தெளிப்புக்குப் பின்னர் வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், கொசு மருந்து பயன்பாடும் 6% குறைந்துள்ளது. ட்ரோன் பயன்பாட்டால் ஆட்கள் கூலியும் குறையும்" என்று தெரிவித்தார்.


மாதத்துக்கு ரூ.22 லட்சம்:


ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பதற்கு மாதத்துக்கு ரூ.22 லட்சம் மட்டுமே செலவாகும் என சென்னை பெருநகர மாநகராட்சி கணக்கிட்டுள்ளது. இதிலும் பேச்சுவார்த்தை மூலம் கொஞ்சம் செலவைக் குறைக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. கொசு ஒழிப்பு மூலம் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஜைகா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பெருந்தொற்று காலத்தில், இது போன்ற நோய்களும் பெருகினால் அரசுக்குக் குறிப்பாக சுகாதாரத் துறைக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதாலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இதற்கிடையில் மலேரியா ஒழிப்புப் பணியில் 3400 ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளார் ஆணையர் ககன்தீப் சிங் பேடி என்பது குறிப்பிடத்தக்கது.