பெங்களூரு உட்பட எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு என வந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

 


 

சிங்கப்பூரில் பல கோடி

 

கடந்த 2007, 2011, 2012 ஆண்டுகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கும் 35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அமலாக்கத் துறையினரின் தொடர் விசாரணையில், எம்ஜிஎம் மாறனுக்குச் சொந்தமான 500 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது.


 

எம்ஜிஎம் குழுமத்தில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 40 இடங்களில் எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெளிநாட்டு முதலீடுகள் , வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் என பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் ஆகியவை இந்த வருமான வரி சோதனையில் சிக்கி உள்ளதாக தெரிகிறது. வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்கா , எம்ஜிஎம் ரிசார்ட் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

 


 

இந்நிலையில் விழுப்புரத்தில் எம்ஜிஎம் குழுமத்தின் மதுபான ஆலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் ஊழியர் சிலர் முக்கிய ஆவணங்களை வயல்வெளிகள் வீசியதை கண்டுபிடித்து வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

புதிய புகார்

 

இந்நிலையில் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆக்சிஸ் வங்கி உதவி துணை தலைவர் ரங்கா பிரசாத் எம்.ஜி.எம் குழுமத்தின் நிறுவனங்களுள் ஒன்றான எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் தங்கள் வங்கியின் பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் சென்னை அண்ணா சாலையில் இயங்கி வரும் தங்கள் தனியார் வங்கி கிளையில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் எம்.ஜி.எம் குழும நிறுவனமான எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் அவர்களின் சிங்கப்பூரில் உள்ள இரு கிளை நிறுவனங்கள், யூ.கே-வில் இயங்கும் ஒரு கிளை நிறுவனம் என 3 நிறுவனங்கள் பெயரில் 3 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, தங்கள் வங்கியின் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் சென்னை ஆர்.கே சாலையில் இயங்கி வரும் நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நேரடியாக அந்நிய செலாவணி முதலீட்டில் எஸ்.ஏ.எஃப்.எல் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், இந்த நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் தங்கள் வங்கியின் மூலம் நடைபெறுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.