விமான நிலையம் வர லேட்; வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்ட பயணி - பொறிவைத்து பிடித்த போலீஸ்
சென்னைக்கு இன்று காலை 10:15 மணிக்கு செல்ல இருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
Continues below advertisement

விமானம் (மாதிரப்படம்)
பாதுகாப்பு சோதனை
விமான நிலையம் வர தாமதம் ஆகிவிட்டதால், தான் பயணிக்கவிருந்த, சென்னை விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாக, புரளியை கிளப்பிய, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பயணியை, ஹைதராபாத் விமான நிலையத்தில், போலீசார் கைது செய்தனர். சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 10:15 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. விமானத்தில் 118 பயணிகள் பயணிக்க இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏறிக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திடீரென ஒரு போன் அழைப்பு வந்தது. ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை 10:15 மணிக்கு செல்ல இருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.
செல்போன் டவரை ஆய்வு செய்தபோது
இதை அடுத்து ஹைதராபாத் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், விமானத்தை சோதனை இட்டனர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை. இந்த நிலையில் ஹைதராபாத் விமான நிலைய போலீசார், எந்த நம்பரிலிருந்து, இந்த போன் கால் வந்தது என்று ஆய்வு செய்தபோது, ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பர் பதிவாகி இருந்தது. அது சென்னையைச் சேர்ந்த பத்ரையா என்பவரின் செல்போன் எண் என்று தெரியவந்தது. இதை அடுத்து செல்போன் டவரை ஆய்வு செய்தபோது, செல்போன் டவர் ஹைதராபாத் விமான நிலையத்தை காட்டியது.
தவறான புரளியை கிளப்பி விட்டு
உடனடியாக சுறுசுறுப்படைந்த போலீசார், அதே விமான நிலையத்தில், விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த, பத்ரயையாவை சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போது, இவருடைய சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து கொண்டு, சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சனி, ஞாயிறு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த பத்ரையா, இன்று இந்த விமானத்தில் சென்னை திரும்ப இருந்தார். ஆனால் இவர் விமான நிலையம் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. எனவே இதைப் போன்ற ஒரு தவறான புரளியை கிளப்பி விட்டு, விமானம் தாமதமானால், சென்று விமானத்தில் ஏறிவிடலாம், என்ற நோக்கத்தில் பத்ரையா, இவ்வாறு கூறியது தெரியவந்தது. இதை அடுத்து ஹைதராபாத் போலீசார், பத்ரையாவை கைது செய்தனர். அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர். அதன்பின்பு அந்த விமானம் 117 பயணிகளுடன் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, இன்று காலை 11:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.