சென்னை ; சட்டவிரோத போதை மாத்திரை விற்பனை !! குட்கா கடத்தல் - அதிரடி கைதுகள் !! நடந்தது என்ன ?
சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் ஐஸ் அவுஸ், ராம்நகர், 8 - வது தெருவில் கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை விசாரணை செய்து அவரை சோதனை செய்த போது அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோத விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 17 வயது இளஞ்சிறாரிடம் விசாரணை செய்தனர்.
அவரிடமிருந்து 10 Nitrazepam மாத்திரைகள் மற்றும் 20 Tydol மாத்திரைகள் என மொத்தம் 30 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் 17 வயது இளஞ்சிறார் சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
சட்ட விரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்த நபர் கைது. சுமார் 75 கிலோ குட்கா பாக்கெட்டுகள் 1 செல்போன் மற்றும் 1 கார் பறிமுதல்.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் சப்வே அருகே வாகன தணிக்கையிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வெள்ளை நிற இன்டிகா காரை நிறுத்தி விசாரணை செய்து, காரை சோதனை செய்த போது கார் டிக்கியில் 10 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ( வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 75.5 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல் மற்றும் கூலிப் ஆகிய 12,250 குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 செல்போன் மற்றும் மேற்படி இன்டிகா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் ஜெயசீலன் ஆந்திராவிலிருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட ஜெயசீலன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.