ரூட் தல எனக்கூறி சக மாணவர்ளுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியைகாட்டி மிரட்டிய  மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்யுமாறு நிபந்தனை விதித்துள்ளது.

 

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் குட்டி என்ற மாணவன்,  ரூட் தல எனக் கூறிக்கொண்டு சக மாணவர்களுடன், புறநகர் ரயிலில் வருபவர்களிடம் கத்தி  மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக குட்டி என்ற மாணவன் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிபதி மாணவனின் தந்தையை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ஒரு சிறிய ஹோட்டலில் காசாளராகப் பணியாற்றி தனது மகனை  சிரமத்துடன் படிக்க வைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னையில் உள்ள  உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மித்ரா மறுவாழ்வு மையத்திற்குச் சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு, பராமரிப்பதில் உதவ வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு வாரமும் அதற்கான அறிக்கையை விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்கவும் மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தையும் உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவனின் கல்வி கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிவாரணம் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.