போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த மூன்று புகாரின் அடிப்படையில் நான்கு வழக்குகள் சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜியும், காவல்துறை முறையான விசாரணை நடத்தாமல் அதன்படி தனக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கை ரத்து செய்ய கோரி குற்றஞ்சாட்டப்பட்ட தேவசகாயம் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது எனவும் தங்களையும் வழக்கில் இணைத்து விசாரிக்க கோரி அமலாக்கதுறை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
இதோபோல் புகார் அளித்தவர்களும் வழக்கை ரத்து செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.
அனைத்து வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவற்றை விடுவிக்க கூடாது என வாதிட்டார். புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சிவஞானம் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்தார். அதே போல் வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கதுறை மனுவையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி, தேவசகாயம், செந்தில் பாலாஜி தொடர்பாக நிலுவையில் உள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கை மீதும் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஓய்வுபெற்ற, நோய்வாய்ப்பட்ட யானைகளை பராமரிப்பதற்காக 2019ல் துவங்கப்பட்ட பெரம்பலூர், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட யானைகளை கொண்டு குவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அங்கு முழு நேர யானைகள் மருத்துவ நிபுணர்கள் இல்லை எனவும், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அங்குள்ள ஏழு யானைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவதால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாகன்கள் இல்லை எனவும், முழு நேர கால்நடை மருத்துவர்கள் இல்லை எனவும் மனுதாரர் வாதிட்டார்.
மேலும், இந்த மையத்தின் பொறுப்பாளராக இருந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா, வேலூருக்கு மாற்றப்பட்டதை அடுத்து மையம் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, மையத்தில் உள்ள யானைகளை முறையாக பராமரிக்க வேண்டியது அரசின் கடமை எனவும், மனிதர்களை போல விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், தற்போது வேலூரில் உள்ள வனத்துறை அதிகாரி சுஜாதா, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்து அதன் நிலை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், நாட்டில் உள்ள பிற யானைகள் மறுவாழ்வு மையத்தில் பின்பற்றப்படும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.