புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 

 

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2016 ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார். 

 

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து இருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான 

புழல் சிறை வார்டன் பேச்சுமுத்து தனது வாக்குமூலத்தில், ராம்குமார் கம்பியை கடித்த போது லத்தியால் தள்ளி அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறியுள்ளார். 

 

இதனையடுத்து ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், சிறையில் குறைந்த ஊழியர்கள் உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது எனவும் அரசுக்கு இதில் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

சிறையில் போதியளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ள ஆணையம் ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளது. 

 

ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாயை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும்  என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது.








மற்றொரு வழக்கு

 

பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி. வீரமணி வாபஸ் பெற்றுக் கொண்டார்.

 

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

 

இதை எதிர்த்து கடந்த 2008 ம் ஆண்டு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக தான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது.   பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புத்தகம் வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

 

பின்னர் வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி சந்துரு, கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார், சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் எனவும், தனது கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம் என்று கூறி, தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார். 

 

தனி நீதிபதி இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள்  அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் இப்ராகிம்கலிபுல்லா, கிருபாகரன் அமர்வு, தனது காப்புரிமையை யாருக்கும் அவர் எழுதி தரவில்லை, அவருடைய எழுத்துகளும் பேச்சும் பொது தளத்திற்கு வந்துவிட்டது என்று கூறி தனி நீதிபதி உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர். இந்நிலையில்  நிலுவையில் இருந்த  இந்த வழக்கு நீதிபதி எஸ் சுந்தர் முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது.



அப்போது  திராவிட கழக தலைவர்  வீரமணி சார்பில், இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.