சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பாதிப்புகளை கண்காணிக்க சென்னையின் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கமல் கிஷோர் ஐஏஎஸ், கணேசன் ஐஏஎஸ், சந்தீப் நந்தூரி ஐஏஎஸ், டிஜி வினய் ஐஏஎஸ், மகேஷ்வரி ரவிகுமார் ஐஏஎஸ், பிரதீப் குமார் ஐஏஎஸ், சுரேஷ் குமார் ஐஏஎஸ், பழனிசாமி ஐஏஎஸ், ராஜாமணி ஐஏஎஸ், விஜயலக்ஷ்மி ஐஏஎஸ், சங்கர் லால் குமாவத் ஐஏஎஸ், நிர்மல்ராஜ் ஐஏஎஸ், மலர்விழி ஐஏஎஸ், சிவஞானம் ஐஏஎஸ், வீர ராகவ ராவ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்பிப்பார்கள். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறுவதை உள்ளிட்டவைகளை கவனித்துக் கொள்வார்கள்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1913, 04425619206, 044 - 25619207, 044 - 25619208 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
மேலும் 9445477205 என்ற வாட்ஸ் அப் மூலமும் புகாரை தெரிவிக்கலாம்.
முன்னதாக, வெளியூர்களில் இருந்து சென்னை வருவதை 2இல் இருந்து 3 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தீபாவளிக்காக ஊருக்கு சென்றுள்ள மக்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னை வர வேண்டும் என்று சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்