வளிமண்டலத்தில் மேக மாறுபாடு காரணமாக சென்னையில் நேற்று விடியற்காலை திடீரென பலத்த இடி, மின்னலுடன் மிக மோசமாக மழை பெய்தது. இந்த நிலையில், சென்னையில் இன்றும் அதிகாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னையில் அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலை போக்குவரத்து பாதிப்பு
குறிப்பாக சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்லிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில், மழைநீர் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தாம்பரம் வெற்றி திரையரங்கு ஜிஎஸ்டி சாலையில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அளவு பாதிப்படைந்தனர். இதேபோன்று தாம்பரம் பம்மல் கிருஷ்ண நகர் நெடுஞ்சாலையிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பான்ஸ் ஜி. எஸ் டி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மழை தற்போது நின்று இருப்பதால் வெள்ளநீர் படிப்படியாக வடிய தொடங்கியுள்ளது.
மதுராந்தகத்தில் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் புரட்சித் தமிழர் எழுச்சி பயணத்தின் பிரச்சார கூட்டமானது நடைபெற்றது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில், மதுராந்தகம் பஜார் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பேனர்கள் மதுராந்தகத்தில் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர்கள் இரவு நேரத்தில் காற்றுடன் கூடிய மழையானது பெய்த காரணத்தினால் பேனர்கள் அனைத்தும் மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள சாலையில் விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் பேனர்களை தற்போது அகற்றி வருகின்றனர்.