சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை திமுக எம்பி கனிமொழி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் பறையை இசைத்து தொடங்கி வைத்தனர்.
சினிமாவில் சமூக அரசியல், பிரச்னைகளை ஆழமாக பேசி வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். அத்துடன் கலை, இலக்கியத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், தான் தொடங்கிய நீலம் பண்பாட்டு மையம் மூலம் மார்கழி மாதத்தில் ‘மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். முதலில் இந்த நிகழ்ச்சி சென்னையில் மட்டும் நடத்தப்பட்டது. இந்தாண்டு மதுரை மற்றும் கோவையில் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் கடந்த 18-ஆம் தேதி ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள் என தங்களது நாட்டுப்புற இசை திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பா.ரஞ்சித் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், சென்னை தி.நகர் நகரில் உள்ள வாணி மஹாலில் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஜி.வி பிரகாஷ், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் பா ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பறையிசை முழக்கத்தோடு மார்கழியில் மக்களிசை 2021-ஆம் ஆண்டை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, மாரி-2 திரைப்பட புகழ் வீ. எம். மகாலிங்கம் மார்கழியில் மக்களிசையில் பங்குபெற்று தன் இசையின் மூலம் அரங்கத்தை அதிரவைத்தார். இந்த நிகழ்ச்சியில் 500 கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்