சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்னையிலிருந்து செல்பவர்களுக்கும் மற்றும் சென்னைக்கு வருபவர்களுக்கும் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 


உள்ளூர் மக்கள் பாதிப்பு 


தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருவதால், உள்ளூர் மக்கள் கடும் பாதிப்படைய தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாலை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


குறிப்பாக இந்த சாலையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருவதால் சென்னை உள்பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 


பொதுமக்கள் கோரிக்கை 


செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இந்த வழியாக புறநகர் ரயில் சேவையும் சென்று வருகிறது. இந்தநிலையில் இந்த சாலையைக் கடப்பதற்கு, சுரங்க பாதையோ அல்லது நடை மேம்பாலங்களோ இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


எனவே, முக்கிய இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடமும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமும் கோரிக்கை வைத்து வந்தனர்.


7 இடங்களில் நடைமேம்பாலங்கள்


இதனைத் தொடர்ந்து வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை எந்த பகுதிகளில், நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து 7 இடங்களில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இறங்கியது.


பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், வண்டலூர் ரயில் நிலையம், தைலாவரம் எஸ்டான்சியா டெக் பார்க், பொத்தேரி வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர் ஜங்ஷன், மறைமலை நகர் டவுன்ஷிப், சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை மேம்பாலம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது.


இதனைத் தொடர்ந்து 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த நான்கு மாதங்களுக்குள் அனைத்து நடை மேம்பாலங்களும் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.