மக்கள் மொழியில் மவுண்ட் ரோடு என அழைக்கப்படும் அண்ணா சாலையின் அடையாளமாக விளங்கும் ஜெமினி  மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றுடன் 48 ஆண்டுகள் நிறைவடைந்து 49ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொதுவாக ரயில் பாதையின் குறுக்கே அல்லது ஆறுகள், கால்வாய்கள் குறுக்கேதான் மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநகர வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டப்பட்டதுதான் இந்த ஜெமினி மேம்பாலம்.



சென்னை நகரின் அதிகமான வாகன போக்குவரத்து அண்ணாசாலை வழியாகத்தான் நடைபெறுகிறது. தேனாம்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கதீட்ரல் சாலை ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான சாலைகள் கூடும் இடமாக ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்த பகுதி இருந்தது. இந்த பகுதியை ஜெமினி சர்க்கிள் என்றே மக்கள் அழைத்து வந்தனர். இந்த பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 66 லட்சம் செலவில் 21 மாதங்களில் ஒரு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோதே ஜெமினி சர்க்கிள் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகிறது என்று கூறுவதற்கு பதில் ஜெமினியில் பாலம் கட்டப்படுகிறது என்றே மக்கள் கூறத் தொடங்கினர். இதுவே காலப்போக்கில் இப்பாலத்தை ஜெமினி பாலம் என்று மக்களால் அழைக்கப்பட காரணமானது.



 


1250 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இந்த மேம்பாலம்தான் தமிழகத்தின் முதல் மேம்பாலம் என்ற பெயரையும் இந்தியாவில் கட்டப்பட்டிருந்த மூன்றாவது மேம்பாலம் என்ற பெயரையும் பெற்றது.  இந்த மேம்பாலம் கட்டபட்ட காலத்தில் இந்தியாவிலேயே மிக நீண்ட நீளம் கொண்ட மேம்பாலம் என்ற பெயரையும் ஜெமினி மேம்பாலம் பெற்றிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றன.


1973ஆம் ஆண்டு மாலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகிக்க புதிய மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்அமைச்சர் கருணாநிதி “இது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.



அண்ணா மேம்பாலம் திறப்பு விழாவில் கருணாநிதி பேசுகையில், சென்னை நகரில் உள்ள பாலங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அறிவித்தார். சென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார்.



இதனை தொடர்ந்து பேசுகையில், இப்படிப்பட்ட பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால் நம்முடைய சமுதாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால் இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம். அந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம்.


இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது. சைதாப்பேட்டையில் உள்ள “மர்மலாங்” பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது. மர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் “மறைமலை அடிகளார் பாலம்” என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.



அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்கு “காயிதே மில்லத்”  பெயர் வைக்கப்பட்டு, அந்தப்பாலம் காயிதே மில்லத் பாலம் என்று அழைக்கப்படும். காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம் பெரியார் பெயரால் அழைக்கப்படும். அதைப்போல “ஆமில்டன்” பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தப்பாலம் அம்பேத்கார் பாலம் என்று அழைக்கப்படும்.


பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது. சமுதாயத்திற்காக பாடுபட்ட வர்களுக்கு காட்டப்படுகிற நன்றி உணர்வு இருக்கிறது. ஆகவேதான் பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்டால், அது விளக்கத்திற்காகக் கேட்கப்படுகிற கேள்வியே தவிர, கேலிக்காகக் கேட்கப்படுகிற கேள்வி அல்ல என்பதற்கேற்பத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என கூறினார்.