சென்னையில் முதற்கட்டமாக, 500 மின்சார பேருந்துகள் தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னை மாநகரம் இந்தியாவில் மிகவும் வளர்ச்சி பெற்ற நகரங்களில், ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் சென்னை புறநகர் நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

பொது போக்குவரத்தின் அவசியம் 

சென்னை போன்ற பெரும் நகரங்களில் பொதுப் போக்குவரத்து என்பது, மிக மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ஆகியவை பொது போக்குவரத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்து வருகின்றன. 

Continues below advertisement

குறிப்பாக, இதில் மாநகர பேருந்துகள், தற்போது இயக்கப்பட்டு வந்தாலும், கூடுதலாக மாநகர பேருந்துகள் ‌ தேவைப்படுகிறது. பல்வேறு வழித்தடங்களுக்கு குறைந்த பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் புகார் இருந்து வருகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழக அரசு நடவடிக்கை 

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய மாநகர பேருந்துகளில் வாங்குவதற்கு நடவடிக்கையில் இறங்கியது. தனியார் பங்களிப்புடன் 1100 மின்சார தாழ்தள பேருந்துகளை வாங்க போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. இதற்காக முதல் கட்டமாக 500 பேருந்துகள் வாங்குவதற்காக தனியார் நிறுவனத்திலும் ஒப்பந்தம் போடப்பட்டது. 500 பேருந்துகளில் தற்போது 35 பேருந்துகள் தயாராகி சென்னை பெரும்பாக்கம் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. 

மின்சாரப் பேருந்து சிறப்பம்சங்கள் என்ன ? Chennai Electric bus Key Features 

தற்போது இருக்கும் மாநகர பேருந்துகளை காட்டிலும், இந்த பேருந்தில் அதிக இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று சி.சி.டி.வி கேமரா, சார்ஜ் போடும் வசதிகள் என பல்வேறு கூடுதல், சிறப்பம்சங்கள் இந்த பேருந்தில் இடம்பெறவுள்ளது. தாழ்தள பேருந்து என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பேருந்தாகவும் இந்த பேருந்து அமைய உள்ளது. 

மின்சார பேருந்துகளுக்காக சென்னையில் 5 பனிமனைகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி மற்றும் வியாசர்பாடி ஆகிய பணிமனைகளில் சார்ஜ் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. 

பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?

35 பேருந்துகள் முழுமையாக அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பின் மாநகரப் போக்குவரத்து கழகத்திலும், இந்த பேருந்துகள் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு இந்த பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது: ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த பேருந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர். பெரும்பாலும் ஜூன் 12-ம் தேதி மின்சார, பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கான வழித்தடங்கள் மற்றும் பேருந்து நேரம் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் கூடுதல் மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார பேருந்துகளால் பெருமளவில், மாசு குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.