சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் சொகுசு விடுதி ஒன்றில் மது விருந்து நடப்பதாக நேற்று இரவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி தலைமையிலான குழு நள்ளிரவு 1 மணியளவில் அந்த விடுதிகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியது.
அப்பொழுது அங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மது போதையில் சுயநினைவை இழந்து நடனமாடியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மது விருந்தில் பங்கேற்ற அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு சாப்ட்வேர் என்ஜினீயர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்தவர்களும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, மது விருந்தில் கலந்துகொண்டு பிடிபட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களை காவல்துறையினர் எச்சரித்து பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வின்ச் என்கிற தனியார் நிறுவன மேலாளர் சைமன் என்பவர் தான் இந்த மது விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர் இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலரிடம் ரூ. 1500 முதல் 2 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து மதுவிருந்து வைத்ததாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த ரிசார்டில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட் உள்பட பல்வேறு போதை பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவன மேலாளர் சைமன் உள்பட 5 பேரை தாம்பரம் காவல் ஆணையரக காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மது விருந்தில் கொக்கைன்,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வார விடுமுறை நாட்களில் இதுபோன்ற ரிசார்டுகளில் சட்டவிரோதமாக மதுவிருந்து மற்றும் ஆடல் பாடல்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்