Chennai Doctor Stabbed: சென்னையில் கிண்டி மருத்துவமனை மருத்துவர் கத்திக்குத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்திருந்தார்.
போராட்டத்தை வாபஸ் பெற்ற மருத்துவர்கள்
அதன்படி, தற்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு கொடுத்த வாக்குறுதியை ஏற்று மருத்துவ சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மருத்துவர் மீதான தாக்குதலில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார். அதில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் திரு.பாலாஜி அவர்கள் மீது, அங்கு சிகிச்சையிலுள்ள ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர் கொடூர முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதல்களை ஒரு போதும் ஏற்க முடியாது.
உடனடி நடவடிக்கை
இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை தொடர்பான விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம். மேலும், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம் என தெரிவித்திருந்தார்.
வெளியான பரபரப்பு தகவல்கள்
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், தனது தாயாருக்கு முறையான சிகிச்சை தராததால் அவரை கத்தியால் குத்தியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் கைதான விக்னேஷின் தாயார் பிரேமா பரபரப்பு பேட்டியை கொடுத்துள்ளார். அவரது தாய் பிரேமா கூறுகையில், அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் போடப்பட்ட நான்கு ஊசி காரணமாக எனது உடல்நிலை மிக மோசமாக மாறியது. அரசு மருத்துவமனையில் தொடர்ந்து எங்களை அலைக்கழிக்க வைத்தார்கள். அரசு மருத்துவர்கள் எங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாக பேசினார்கள். இதனால் விரக்தி அடைந்து எனது மகன் இவ்வாறு செய்திருப்பார்” என அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.