சென்னையில், ஏபிபி நெட்வொர்க் நடத்திய ஸ்மார்ட் லைஃப் ஸ்மார்ட் லிவிங் கருத்தரங்கில் துணை மேயர் மகேஷ்குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர்கள் என குறிப்பிட்டார். அவர்களின் தீவிர முயற்சியால், சென்னை விரைவில் சிங்கப்பூர் போல் மாறும் என்று தெரிவித்தார். அவரது உரையாடலின் தொகுப்பை தற்போது காணலாம்.
“சென்னை மீது பாசம் கொண்டவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்“
இந்த பதவியை வழங்கும்போது, இது பதவி அல்ல, பொறுப்பு, அந்த பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரை வழங்கினார் என்று தெரிவித்தார். 1996-ல் அன்றைய மேயராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தான் சென்னையின் வளர்ச்சி தொடங்கியதாக மகேஷ்குமார் தெரிவித்தார். சிங்கப்பூருக்கு இணையாக சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என அவர் சூளுரைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சருக்கு சென்னை முழுவதும் அத்துப்படி என கூறிய அவர், அவர் மேயராக இருந்த காலத்தில் தான் சென்னையில் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் 9 மேம்பாலங்களை கட்டி முடித்ததாக தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மீது மிகுந்த பாசம் கொண்டவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என தெரிவித்த துணை மேயர், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது அவரால் தான் எனவும் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், தற்போது பல வழித்தடங்களை நீட்டிக்க அவரே வழிவகுத்ததாகவும் கூறினார்.
இன்னும் 4 வருடங்களில், அனைத்து மெட்ரோ பணிகளும் முடிவடைந்த உடன் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று கூறிய துணை மேயர் மகேஷ்குமார், தொடக்கத்தில் மெட்ரோ பயணத்திற்கு தயக்கம் காட்டிய மக்கள், தற்போது அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.
“துடிப்பாக இயங்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்“
இதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்னையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாகவும், மிகுந்த அக்கறையுடன் செயல்படுவதாகவும் மகேஷ்குமார் குறிப்பிட்டார். உதாரணத்திற்கு, இன்று காலை 6.30 மணிக்கே மாநகராட்சி ஆணையர் தன்னை அழைத்து, 6 மணிக்கே துணை முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து, கண்ட்ரோல் ரூமிற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டதாகவும், சென்னையில் பல்வேறு இடங்களின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, துணை முதல்வரை அழைத்துக் கொண்டு கண்ட்ரோல் ரூமிற்கு சென்று ஆய்வு செய்ததாகவும் கூறினார்.
அதேபோல், ஆய்வு செய்யும்போது, சென்னையில் எத்தனை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கேட்டதாகவும், கடந்த முறை அவர் ஆய்வு செய்த பகுதிகளில் தூர் வாரும் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்ததாகவும் மகேஷ்குமார் குறிப்பிட்டார்.
“சென்னை 2.O - மேலை நாடுகள் போல் வளர்ச்சி“
சென்னை 2.O குறித்து பேசிய சென்னை துணை மேயர், மேலை நாடுகள் போன்ற ஒரு வளர்ச்சி இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், அடையாறு ஆற்றில் கலக்கும் நிறுவனங்களின் கழிவுகளை நிறுத்தி, ஆற்றின் நீரை தூய்மைப்படுத்துவதற்காக, 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை, மாதம் தோறும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், மெரினாவை அழகுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், சர்வதேச அளவில் ஆலோசனைகளை பெற்று அந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். தான் லாஸ் வேகாசிற்கு சென்றிருந்தபோது, சங்கீத நீர்வீழ்ச்சியை பார்த்து கவரப்பட்டு அது போன்று இங்கு அமைக்கவும், அதேபோல் நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்களையும் அழகு படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக துணை மேயர் தெரிவித்தார்.
“1913-ல் அழைத்தால் சென்னை மாநகரட்சியின் இலவச சேவை“
மேலும் ஃபிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு பார்ததுபோல், சென்னையின் பேருந்து நிறுத்தங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதேபோல், ஸ்பெயினில் இலவச எண்ணில் அழைத்தால், நமது வீட்டில் உள்ள பழைய மெத்தை, தலையணைகள், உடைந்த மேசை, நாற்காலிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள் என்றும், அதை தற்போது சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தியுள்ளதாவும் கூறினார். 1913 என்ற எண்ணில் அழைத்தால், மாநகராட்சி ஊழியர்கள் இல்லங்களுக்கே வந்து இலவசமாக அவற்றை எடுத்துச் செல்வார்கள் என்று மகேஷ்குமார் தெரிவித்தார்.
சென்னையில் தண்ணீர் தேங்குமா.?
மழை காலம் வந்துவிட்டதால், சென்னையில் தண்ணீர் தேங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த துணை மேயர், 2 மணி நேரம் வரை தண்ணீர் தேங்குவது இயல்பு என தெரிவித்தார். அதற்கு காரணம், மழைநீர் வடிகால்கள் கால்வாய்களில் கலந்து, அது கடலுக்கு சென்று சேர வேண்டிய நிலையில், கடல் அலைகளின் சீற்றத்தால் தண்ணீர் உள்ளே புகாது என்றும், சீற்றம் குறைந்த உடன் தண்ணீர் கடலுக்குள் சென்றுவிடும் என விளக்கமளித்தார்.