தற்போது பருவமழை எதிர்கொள்ளும் வகையில் எந்த  இடத்திலும் மழை நீர் தேங்காத வண்ணம்  மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதாக துணை மேயர் மகேஷ் குமார் கூறியுள்ளார்.


சென்னை பெருநகர மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மயிலாப்பூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.


முதலாவதாக நாகேஸ்வரரா பூங்கா உள்ளே அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அதனை தொடர்ந்து முசிறி சுப்பிரமணி சாலையிலும், பி.எஸ். சிவசாமி சாலையிலும் அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நிலவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது , மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ;


திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சென்னையில் 2000 மழை நீர் வடிகால்கள் மட்டுமே இருந்தது. திமுக அரசு அமைந்து தளபதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் சென்னை மாநகராட்சி முழுவதும் மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதன் பெயரில் இதுவரை 1000 கிலோமீட்டர் புதியதாக வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு துறை பணியாக இருந்தாலும் சாலையை வெட்டும் போது சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்றதற்கு பிறகு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இருக்கும் இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது.


எந்தப் பகுதியிலும் தண்ணீர் நிற்காத வண்ணம் பருவ மழைக்கு முன்பே மழை நீர் வடிகால்  பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எல்லா பகுதிகளிலும் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இயற்கை பேரிடர் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து ஒரே நாளில் அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்துள்ளோம். அனைத்திற்கும் அரசு முழு ஒத்துழைப்போடு செயல்படும் என தெரிவித்தார்.