இன்ஸ்டாகிராமில் கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட புது மாப்பிள்ளை
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஸ்பீடு சஞ்சய் ( வயது 23 ). ரவுடியாக வலம் வரும் இவர் மீது 13 குற்ற வழக்குகள் உள்ளன. வழக்கு தொடர்பாக போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 14 - ம் தேதி சஞ்சய்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணலியில் 13 - ம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. திருமண வரவேற்பு மேடையிலேயே , மாப்பிள்ளை சஞ்சய் கத்தியை சுழற்றி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் வீடியோ காலில் துப்பாக்கி சந்தோஷ் என்ற ரவுடியை எச்சரிக்கும் வகையில் இந்த கத்தியை உன் தலைக்காக தான் வைத்துள்ளோம் என மிரட்டியுள்ளார். இதையறிந்த போலீசார் திருமணம் முடியும் வரை காத்திருந்து அடுத்த நாளான 15 - ம் தேதியே சஞ்சயை கைது செய்தனர். கைது செய்யும் போது தப்பி ஓட முயன்ற சஞ்சய் தவறி விழுந்ததில் , இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சஞ்சய் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளிகளான புளியந்தோப்பைச் சேர்ந்த 'காண்டு' சரவணன் ( வயது 22 ) , முகமது ஜலில்லா ( வயது 24 ) ஆகாஷ் ( வயது 24 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பூட்டிய வீட்டில் ஜன்னல் வழியாக நுழைந்து திருடிய மர்ம நபர்
சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் குடியிருப்பை சேர்ந்தவர் மீனா ( வயது 57 ) இவர் கடந்த 13 தேதி இரவு திண்டிவனத்தில் உள்ள அவரது மகளின் சீமந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து 15 - ம் தேதி இரவு வீட்டுக்கு வந்த மீனாவும் , அவரது கணவர் கிருபனும் , வீட்டின் பூட்டை திறந்த போது , வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 கிராம் தங்க நகை ,1 கிலோ வெள்ளி பொருட்கள் , 30,000 ரூபாய் ஆகியவை காணாமல் போயிருந்தன. வீட்டின் பின் பக்கம் சென்று பார்த்த போது, கழிவுநீர் குழாயில் ஏறி , கழிப்பறை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் , நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, மீனா அளித்த புகாரின்படி, பேசின்பாலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 3 பேர் கைது
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் அருகே சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 11ம் தேதி காலை, கோவிலுக்கு பக்தர்கள் வந்த போது கோவிலின் வெளிப்புறப் பகுதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், கோவிலின் உட்புற பூட்டும் உடைக்கப்பட்டு கருவறைக்குள் உள்ள சுவாமி சிலைக்கு அணிவித்து இருந்த நான்கு கிராம் தங்க சங்கிலி மற்றும் கோவிலில் இருந்த வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. விசாரித்த செங்குன்றம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொளத்துார் தில்லை நகரைச் சேர்ந்த ஜெயபிரதாப் , அரிகிருஷ்ணன் மற்றும் கள்ளக் குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.