சென்னையில் கடந்த ஐந்தாண்டுகளாக பழுதாகி இன்னும் சீரமைக்கப்படாமல் இருக்கும் சாலைகளை மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி, சென்னையில் உள்ள பழுதான சாலைகளைக் கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு மேல், பழுதாகிக் கிடக்கும் சாலைகளை ரூ.400 கோடி மதிப்பு தொகையில் புதிய சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது.
சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி (Gagandeep Singh Bedi) இந்தாண்டின் தொடக்கத்தில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்புக்கு பின்னர், நகர்புற திட்டங்கள் செயல்ப்படுத்தப்படும் என்றும், மாநகராட்சி கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள பழுதடைந்த சாலைகளின் பட்டியலை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், சாலைகளின் பழுதடைந்த நிலைமையை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு முன்னுரிமை வழங்கப்பட்டு மறுசீரமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வாசிகள், நீண்டகாலமாக பழுதடைந்துள்ள மெயின் ரோடு இல்லாத வசிப்பிடத்தின் உள்ளே இருக்கும் சாலைகளையும் சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை அடுத்து, சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்கள், மிக மோசமாக பழுதடைந்துள்ள சாலைகள் குறித்தும், எது உடனடியாக சீரமைக்கப்பட வேண்டியது என்பது குறித்தும் பட்டியலை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரதான மற்றும் வாழ்விடங்களில் உள்ளே உள்ள சாலைகள் சீரமைக்க ஒதுக்கப்பட உள்ள தொகையில் 20 சதவீதம் நிதி பேருந்து போக்குவரத்து இருக்கும் சாலைகள் சீரமைக்க பயன்படுத்தப்படும் என்றும், வாழ்விடங்களில் உள்புற சாலைகளை சீரமைக்க ரூபார் 325 கோடி மதிப்பிலான தொகை செலவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 471 பேருந்து வழித்தட சாலைகள் இருக்கின்றன. 40,000க்கும் மேற்பட்ட உள்புற சாலைகள் இருக்கின்றன. தற்போது வரை சுமார் 600 சாலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையின் சாலைகள் சிறப்பாக இருக்கவும், பாலங்கள், சுவர்கள் உள்ளிடவைகளில் வண்ணங்களால் ஓவியம் தீட்டி எழில்மிகு சென்னையாக மாற்றும் மாநகரின் பல பகுதிகளில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்