Chennai Corporation: சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரிப்பன் மாளிகையில் 500 போலீசார் குவிப்பு:

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பணியாளர்கள் மீண்டும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. காலை 9 மணி தொடங்கி 10 முதல், அதிகளவில் போராட்டக்காரர்கள் குவியக்கூடும் என கூறப்பட்டது. இதையடுத்து, ரிப்பன் மாளிகை வளாகத்தில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மீறி யாரும் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்ய முடிவு?

சென்னை ரிப்பன் மாளிகையில் 5 துணை ஆணையர்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக CCTV கண்காணிப்பு வாகனங்கள், 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள், 3 தீயணைப்பு வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், காவல் ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளும் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஒருவேளை போராட்டக்காரர்கள் அங்கு குவிந்தாலும், உடனடியாக அவர்களை கைது செய்து, மாநகராட்சி அலுவலகம் உள்ள பகுதியிலிருந்து வெளியேற்ற காவல்துறை முடிவு செய்துள்ளதை உணர முடிகிறது.

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை:

மாநகராட்சியில் 5 மற்றும் 6வது மண்டலங்களில் செய்யப்படும் தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்றும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலகத்திலேயே நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தையின்போதும் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனாலும், கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், இரவும் பகலும் என தொடர்ந்து 13 நாட்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்புறப்படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்:

இதனிடையே, தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் முடிவில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, போராட்டக்காரர்களை போலீசார் இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அங்கிருந்து மாநாகராட்சி பேருந்துகளில் ஏற்றி வெளியேற்றினர். அப்போது சிலருக்கு காயமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தான், திமுக அரசின் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் தான் இன்று மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.