சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.


சென்னை ஜாபர்கான்பேட்டையில் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்கு முன்பாக போதிய முன்னெச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்படாததால், 24 வயதே ஆன தனியார் தொலைக்காட்சியின் உதவி ஆசிரியர் முத்துகிருஷ்ணன்  என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துகிருஷ்ணன் பள்ளத்தில் விழுந்த போது கம்பி கழுத்தில் குத்தி சுமார் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக பதற வைக்கும் தகவல் வெளியானது. பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சமும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.


இந்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "கடந்த ஆண்டு சென்னையில் பலத்த மழை பெய்தது. ஆனால், பல பகுதிகளில் மழை நீர் வடிகாலில் இருந்து வெளியேறவில்லை. கடந்த 7 முதல் 8 மாதங்கள் வரை தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




நெடுஞ்சாலை துறை உதவியுடன் சென்னையில் மட்டுமல்ல, செம்மஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர் வளத் துறை துறை சார்பில் ரூ.20 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் மழை நீர் வடிகால் பணிகள் 964 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சென்னையில் பல்வேறு மண்டலங்களில் 244 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சீதாம்மல் காலனி, தியாகராய நகர், ஹபிபுல்லா சாலை, ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை, அசோக் நகர், மாம்பலம், விருகம்பாக்கம், அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கூடிய விரைவில் அனைத்துப் பணிகளும் நிறைவு பெறும்" இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, நேற்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஜி.என்.செட்டி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.


இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவலின்படி, சித்ராங் சூறாவளி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, டாக்காவில் இருந்து வடகிழக்கே 90 கிமீ தொலைவில் வங்காளதேசத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என தெரிவித்துள்ளது.