தொடர்மழையால் புதுச்சேரியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது; தற்காலிக முகாமோ, உணவு வசதியோ அரசு செய்து தராத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். தொடர் மழையால் புதுச்சேரி வெள்ளக்காடானாது. வீடுகளில் மழைநீர் புகுந்தது. பாதிக்கப்பட்டோருக்கு உணவோ, தற்காலிக முகாமோ எவ்வித ஏற்பாடுகளையும் புதுச்சேரி அரசு தரப்பில் மாவட்ட நிர்வாகம் ஏதும் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் யாரும் ஆய்வு செய்யாத சூழலும் நிலவியது. முதல்வர் காரில் அமர்ந்தவாறே பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்த்ததாகக்குறிப்பிட்டனர்.


புதுச்சேரியில் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய தொடர் மழை பெய்து வருகிறது. கனமழையாக நிதானமாக மழை பெய்தவண்ணம் உள்ளது. இதனால் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 82.1 மிமீ மழை பொழிந்தது. குறிப்பாக இந்திராகாந்தி சிலை, சிவாஜி சிலை, புஸ்சி வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதனால் நகர பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.




தொடர் மழை எதிரொலியாக பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், உப்பறம் மணல்மேடு, நேதாஜி நகர், வாணரப்பேட்டை, வம்பாகீரப்பாளயைம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக பாவாணர் நகர் பகுதியில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அங்குள்ள நான்கு பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. சாலையெங்கும் பள்ளங்கள் இருந்ததால், அப்பகுதியினரே தடுப்பு கட்டை கட்டியும், வாகனங்களை குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.


பாதிக்கப்பட்டோர் கூறுகையில், வடிகால் வசதி இல்லை. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. நள்ளிரவு முதல் வீட்டுக்கு தண்ணீர் வந்து பாதிக்கப்பட்டும் யாரும் வந்து பார்க்கவில்லை. உணவுக்கும் வழியில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். மழைநீர் தேங்கிய சில பகுதிகளில் ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் மழைநீர் தேங்கியவாறே உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.




தமிழகத்தின் சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டதால் மலட்டாறு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் புதுவையில் உள்ள படுகை அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இங்கு பொதுமக்கள் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை காரணமாக விவசாயப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதேபோல கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், அன்றாட கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களும், மீன்விற்கும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.




பொதுமக்கள் கூறுகையில், தொடர் மழை பெய்தும் தங்க தற்காலிக முகாமோ, உணவோ தர புதுச்சேரி அரசு தரப்பில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். அதேபோல் அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர். முதல்வர் ரங்கசாமி காரில் அமர்ந்தவாறே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்ததாக அவரது அலுவலக தரப்பில் குறிப்பிட்டனர்.