கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னையில் வசித்து வரும் 19 வயது பெண் ஒருவர் கல்லூரி இளங்கலை படித்துக் கொண்டு , அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்வி பயிற்சி நிறுவனத்தில் சுமார் 10 நாட்களுக்கு முன் சேர்ந்து கல்வி பயிற்சி பெற்று வருகிறார்.
பெண் பயிற்சி வகுப்பில் இருந்த போது, அதே கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளராக (Trainer) வேலை செய்து வரும் மணிமாறன் என்பவர் பயிற்சி கொடுப்பது போல அப்பெண்ணின் அருகில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், அந்த கல்வி நிறுவனத்தில் புகார் தெரிவித்து, பின்னர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னியம்மன்மேடு மணிமாறன் ( வயது 42 ) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிமாறன் என்பவர் கல்வி நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மணிமாறன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மாநகர பேருந்தில் பெண்ணுக்கு ஆபாச செய்கை காண்பித்த 2 பேர்
சென்னை எண்ணூர், நேரு நகரில் வசித்து வரும் பிரதீப்குமார் ( வயது 36 ) என்பவர் அரசு மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தடம் எண்.1 C என்ற பேருந்தை தீவுத் திடலில் இருந்து எண்ணூர் வரை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது மதியம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 2 நபர்களிடம் மேற்படி பேருந்தின் நடத்துனர் மணிமாறன் என்பவர் பயணச் சீட்டு கேட்ட போது, இருவரும் சேர்ந்து, நடத்துனர் மணிமாறனை தகாத வார்த்தைகள் பேசியும், பேருந்தில் இருந்த பெண் பயணியிடம் ஆபாச செய்கை செய்து, அப்பெண் பயணியை கையால் தாக்கியுள்ளனர்.
அதன் பேரில் மணிமாறன், மீன்பிடி துறைமுகம் பேருந்து நிறுத்ததில் இருவரையும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறிய போது, மணிமாறனை, இருவரும் சேர்ந்து கைகளாலும், கால்களாலும் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இத்தாக்குதலில் மயக்கமடைந்த மணிமாறனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் பிரதீப்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரும் மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் இருவேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மீன்பிடி துறைமுக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குமார், ( வயது 32 ) , தேசிங்குராஜ் ( வயது 21 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.