கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷா என்ற கர்ப்பிணிப் பெண் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். 8 மாத நிறை கர்ப்பிணியான அந்த பெண் தனது இரண்டாவது குழந்தைக்காக காத்திருந்தார்.

 

இந்நிலையில் திடீரென அவருக்கு விஷக்காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதோடு சுயநினைவு பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் அழைத்துவரப்பட்டார்.



உடனடியாக மகப்பேறு மருத்துவமனையில் உள்ள பிரசவ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மகப்பேறு மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், நெஞ்சகத் துறை, மயக்கவியல் துறை, நரம்பியல் துறை, நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. சிடி ஸ்கேன், எக்ஸ்ரே முதுகுத்தண்டு நீர் பரிசோதனை மற்றும் அனைத்து ஆய்வக பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

 



கடுமையான மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி, சுவாச செயலிழப்பு, கண்டுபிடிக்கப்பட்டு  செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு உடனடியாக அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

இதன்மூலம் 2.4 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிரசிபிக்கப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் பராமரிக்கப்பட்டது.



 

பிரசவத்திற்கு பின் தாய் மனிஷா மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவ குழுவால் தினமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். 44 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டனர். சுவாசம் சீர் படுத்தப்பட்ட பின்னர் 19 நாட்கள் உயர் சார்பு பிரிவியல் சிகிச்சை அளிக்கப்பட்டது. மகப்பேறு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு மருத்துவ குழுக்களின் ஆலோசனைப்படி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நாராயணசாமி மற்றும் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் முழுமையாக உடல்நிலை சரியான நிலையில், 33 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்பு இன்று தாயும் சேயும் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 



இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “தொடர் சிகிச்சையின் காரணமாகவே ,தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடிந்தது. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தாய் கண்காணிக்கப்பட்டு, இதற்காக ஒவ்வொரு குழு தலைவர்கள் மற்றும் குழுவில் பணியாற்றிய இள மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

 

இதுகுறித்து துறை தலைவர் மருத்துவர் வெங்கடேஸ்வரி கூறுகையில், “இதுபோன்ற பிரச்சனை கர்ப்பிணிக்கு வருவது அரிதிலும் அரிதான செயல். பத்தாயிரத்தில் ஒருவருக்கே இது போன்று நடைபெறும். இதுபோன்ற சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சுயநினைவு இல்லாத கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு தற்பொழுது வீட்டிற்கு அனுப்பி இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனத்   தெரிவித்தார்.