தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 46வது புத்தக கண்காட்சி கடந்த 6ம் தேதி தொடங்கியது.
16 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்துவதோடு, 10 சதவிகித தள்ளுபடி விலையிலும் புத்தகங்கள் விற்கப்பட்டன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை நடைபெற்று வந்தது.
சென்னை புத்தக கண்காட்சிக்காக கடந்தாண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டன. அதேசமயம் முதன்முறையாக திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்திற்கு அரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு சார்பிலான சர்வதேச புத்தக கண்காட்சியும் ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் என பலரும் நடப்பாண்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர்.
புத்தக வாசிப்பாளர்களை சந்திக்க ஏராளமான எழுத்தாளர்களும் வருகை தந்தனர். கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்றவை நடைபெற்றதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் சென்னை புத்தக கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்தநிலையில், தமிழ்நாடு சிறை துறையின் சார்பில் ’கூண்டுக்குள் வானம்’ என்கின்ற அரங்கின் மூலம் புத்தகங்களை தானமாக இந்தாண்டு முதல் பெறப்பட்டது. இந்த புதிய முயற்சியானது முதல்முறையாக சிறை துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 35000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகள் படிப்பதற்காக தானமாக வழங்கப்பட்டுள்ளதாக சிறை துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளுக்கு புத்தக தானம்:
46ஆவது சென்னை புத்தக காட்சியில் தமிழ்நாடு சிறைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 286ஆவது அரங்கமானது அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் தொடர்ந்து வாசகர்கள் வரை அனைவரையும் கவனிக்க வைக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு சிறை துறையின் சார்பில் ’கூண்டுக்குள் வானம்’ என்கின்ற அரங்கின் மூலம் புத்தகங்களை தானமாக பெறப்பட்டு, அதன் மூலம் சிறைவாசிகளுக்கு மனரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த புதிய முயற்சியானது முதல்முறையாக சிறை துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 35000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகள் படிப்பதற்காக தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், சைலேந்திரபாபு, பேரறிவாளன் தொடங்கி பதிப்பாளர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த புத்தகங்களை சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கு வழங்கி இருந்தனர். அதேபோல், சைதாப்பேட்டையில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் சென்னை காட்சி தொடர்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பிலும் புத்தகங்கள் தானமாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறைத்துறை டி.ஐ.ஜி கூறுகையில், “எந்த ஒரு இடத்தில் ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியில் சிறைச்சாலை மூடப்படுகிறது என்கிற விவேகானந்தரின் வார்த்தைகள் தாங்கிய அரங்கு, புத்தகங்களால் நிரம்பி வழிவதை பார்க்கும் போது, அடுத்தடுத்த புத்தகக் காட்சிகளிலும் சிறைத்துறைக்கு என தனி ஒரு அரங்கங்கள் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன், சென்னை புத்தக கண்காட்சியில் மடி ஏந்தி சிறைவாசிகளுக்கு புத்தகம் தானமாக பெறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.