சென்னை நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் (MRTS) சேவைகள், மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் பரங்கிமலை (St. Thomas Mount) வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

புதிய வழித்தடம் மற்றும் நிலையங்கள்

வேளச்சேரி - பரங்கிமலை இடையே சுமார் 4.5 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை  ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம், இனி பரங்கிமலை நிலையம் பறக்கும் ரயில்களின் முனையமாக (Terminal Station) செயல்படும். இது புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுடன் எளிதாக இணைப்பை ஏற்படுத்த பயணிகளுக்கு உதவும்.

மாற்றப்பட்ட ரயில் அட்டவணை

தற்போது சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே மட்டும் 43 ஜோடி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனி இந்த சேவைகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன:

Continues below advertisement
  • சென்னை கடற்கரை - பரங்கிமலை: 43 ஜோடி ரயில்கள்.

  • சென்னை கடற்கரை - வேளச்சேரி: 02 ஜோடி ரயில்கள்.

  • வேளச்சேரி - பரங்கிமலை: 03 ஜோடி ரயில்கள்.

ஆதம்பாக்கம் நிலையத்தில் தற்காலிக மாற்றம்

செயல்பாட்டு காரணங்களினால், தொடக்கக் கட்டத்தில் ஆதம்பாக்கம் (ABKM) நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் ரயில்கள் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் நிற்கும் இடங்கள் 

  • சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை: கோட்டை, பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டகக்கண்ணியம்மன் கோவில், திருமயிலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி மற்றும் புழுதிவாக்கம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். (ஆதம்பாக்கத்தில் நிற்காது).

  • மறுமார்க்கத்தில்: பரங்கிமலையிலிருந்து புறப்படும் ரயில்களும் அதே வரிசையில் ஆதம்பாக்கம் தவிர்த்து மற்ற அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.

இந்த விரிவாக்கம் சென்னையின் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்துவதுடன், நகரின் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயண நேரத்தைக் குறைத்து, எளிதான பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.