பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த ரயலில் பயணிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. ரயில் ஓட்டுநருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மின்சார ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்ல பணிமனையிலிருந்து முதலாவது நடைமேடைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரேக் பிடிப்பதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே துறை சார்பில் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருந்துள்ளது. இதனால் விபத்தில் பயணிகள் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ரயில் விபத்தில் முதலாவது நடைமேடையில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடைமேடையில் ஏறிய ரயிலை கீழே இறக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்