காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் எதிரே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1988 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது இந்திரா காந்தி சிலை. இந்நிலையில், சென்னை பெங்களூர் தேசிய சாலையின் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. விரிவாக்கம் பணி காரணமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரிடம் தெரிவித்துள்ளனர். 



 

இதனால் கடந்த மாதம் 26 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் உதவியுடன் இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டபோது, காங்கிரஸ் கட்சியினர் தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் சில நாட்கள் அவகாசம் கொடுங்கள். நாங்களே இந்திரா காந்தி சிலையை அகற்றி விடுகிறோம் என கோரிக்கை விடுத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்திரா காந்தி சிலையை அகற்றுவதை சில நாட்கள் தள்ளி வைத்தனர்.



 

 அதனைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி சிலையை அகற்றி ராஜீவ் காந்தி நினைவகம் நுழைவாயில் அருகே வைத்தனர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  சாலை முழுவதும் வாகனங்கள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக ஸ்தம்பித்து நின்றது.



 

 சென்னை, பூந்தமல்லி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கிற பணியாளர்கள் குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திரா காந்தி சிலையை அகற்றி இருந்தால், வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த இடையூறும் இருந்திருக்காது என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

 



 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்