சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டாலும் சென்னையின் உள்ளே இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு நேரடியாக பேருந்துகள் மட்டுமே இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விரிவான திட்ட அறிக்கை:
இதனால், மெட்ரோ சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை அடுத்து விமான நிலையம் வரை உள்ள மெட்ரோ சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கும் அறிவிப்பு வந்தது. இதையடுத்து, இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது.
ரூ. 9, 335 கோடி:
இந்த நிலையில் விமான நிலையம் மெட்ரோ ரயில் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூபாய் 9 ஆயிரத்து 335 கோடி மதிப்பில் இந்த மெட்ரோ நிலையங்கள் உருவாக உள்ளது.
13 மெட்ரோ ரயில் நிலையங்கள்:
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மொத்தம் 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் உருவாக உள்ளது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக இந்த புதிய மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வந்தால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக அமையும்.
ஏனென்றால், கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக மின்சார ரயில் சேவையும் கிடையாது. கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் நிலையத்தை உருவாக்கவும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான பணிகள் மிகவும் தாமதமாகும் என்று கருதப்படுகிறது. இதனால், 15.46 கி.மீட்டர் வழித்தடத்திற்கு இந்த விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து சிக்கல்:
தமிழ்நாடு அரசிடம் இன்று சென்னை மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனர், பொதுமேலாளர் ஆகியோர் இதை வழங்கினார். இதையடுத்து, விரைவில் இந்த புதிய வழித்தடத்திற்கான மெட்ரோ ரயில் நிலைய பயணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தீபாவளி, பொங்கல் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மக்கள் படையெடுப்பார்கள். இதனால், சென்னையின் பிரதான சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
4 ஆண்டுகளில் கிளாம்பாக்கம் மெட்ரோ?
இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு வரும் 4 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான நிதியில் 50 சதவீதம் தமிழ்நாடு அரசும், 50 சதவீதம் மத்திய அரசும் வழங்க உள்ளது. இதையடுத்து, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் நிலைய பணி முடிவு பெற்றால் விம்கோ நகர் முதல் கிளாம்பாக்கம் வரை என சென்னையின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு சென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.