சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.2,467 கோடி திட்டத்தில், இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2018 ஆம் ஆண்டில் முடிவு செய்து பணிகளை தொடங்கியது. அதில் முதல் கட்ட பணி, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு, இந்த ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், டெர்மினல் 2 (டி 2) இந்த ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதில் விமான சேவைகள், இந்த ஆண்டு ஜூலை ஏழாம் தேதியிலிருந்து முழு அளவில் நடந்து கொண்டு இருக்கின்றன.

 

இதற்கிடையே பழைய சர்வதேச முனையம் டெர்மினல் 4, நல்ல நிலையில் இருந்ததால், அதை இடிக்காமல், கூடுதல் உள்நாட்டு விமான முனையமாக  பயன்படுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. இதை அடுத்து சர்வதேச முனையமாக இருந்த, அந்த டெர்மினல் 4, உள்நாட்டு முனையமாக மாற்றி அமைக்கும் பணி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கி, நடந்து கொண்டு இருந்தது. பணிகள் முடிவடைந்ததும், டெர்மினல் நான்கை புதிய உள்நாட்டு முனையமாக செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்தன. புதிய உள்நாட்டு முனையம் கடந்த செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிவடையாததால், கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் பணிகள் முடிவடையாததால், புதிய உள்நாட்டு முனையம் திறப்பு, நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

 

உள்நாட்டு முனையமாக மாற்றும் பணிகள் நிறைவடைந்து விட்டதால், வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து இந்த புதிய உள்நாட்டு முனையம் செயல்பாட்டிற்கு வர இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அறிவித்துள்ளனர். இதையொட்டி வரும் நவம்பர் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் சோதனை அடிப்படையில், விமானங்கள் தரையிறங்குவது புறப்படுவது போன்றவைகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஏ ஐ 550, அந்தமானில் இருந்து சென்னை வரும் உள்நாட்டு விமானம், காலை 10:20 மணிக்கு, சென்னை புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் வந்து தரை இறங்குகிறது. அதைப்போல் அதே ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஏ.ஐ.563, சென்னை புதிய உள்நாட்டு முனையத்தில் இருந்து, காலை 11:10 மணிக்கு பெங்களூருக்கு, புறப்பட்டு செல்கிறது.

 

அதன்பின்பு வரும் 15 ஆம் தேதி புதன்கிழமை, அதிகாலையில் இருந்து புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4, முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உள்நாட்டு முனையம் டெர்மினல் 1 ல், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு பயணிகள் விமானங்கள் முழுமையாக இயக்கப்படும். அதோடு ஸ்பை ஜெட், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஆகாஷா  விமானங்கள் அனைத்தும், ஏற்கனவே உள்ள டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்படும், வரும்.

 

புதிதாகத் தொடங்கப்படும் புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் நான்கில் இருந்து, ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களின் உள்நாட்டு விமான சேவைகள், வருகை புறப்பாடு அனைத்தும் இயக்கப்படும். அதைத்தொடர்ந்து வரும் காலங்களில் படிப்படியாக, ஸ்பை ஜெட், விஸ்தாரா, ஏர் ஏசியா, ஆகாஷா விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகளும், டெர்மினல் நான்கிற்கு மாற்றப்பட இருக்கிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். எந்த விமானங்கள் எந்த டெர்மினலில் இருந்து புறப்படும் என்பது பற்றிய அறிவிப்பு பலகைகள், பயணிகள் வசதிக்காக அடுத்த ஓரிரு தினங்களில் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் ஒன்று, டெர்மினல் 4 என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு இட நெருக்கடி இல்லாமல், கூடுதல் இடவசதி கிடைக்கும். அதோடு சென்னை  உள்நாட்டு விமான  பயணிகளின் வசதிக்காக, மேலும் கூடுதல் விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன  என்றும், விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.