சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்தது. அப்போது ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி நிர்ணயம் செய்தனர்.


அந்தக் கட்டண உயர்வு அதிகம், அதோடு வாகனங்களை மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் கொண்டு போய் நிறுத்தி, மீண்டும் வெளியே எடுத்துக் கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதற்கான வழிகள் தெளிவாக இல்லை என்று பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தி நிலவி வந்தது.


அதிகரித்த பார்க்கிங் கட்டணம்


இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம், 2 ஆண்டுகளுக்குப் பின்பு, இன்று முதல் மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.80 ஆக இருந்தது, தற்போது ரூ. 85 ஆக அதிகரிப்பு. அதேப்போல் கார்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கு, ரூ. 525 ஆக இருந்தது, தற்போது ரூ.550 ஆக அதிகரிப்பு.


எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது


டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 ஆக இருந்தது, தற்போது ரூ.330 ஆக அதிகரிப்பு. 24 மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது, தற்போது ரூ.1,100 ஆக அதிகரிப்பு. பஸ், லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம், ரூ.630 ஆக இருந்தது, தற்போது ரூ.660 ஆக அதிகரிப்பு. 24 மணி நேரத்திற்கான கட்டணம் ரூ.2,100 ஆக இருந்தது, தற்போது ரூ.2,205 ஆக அதிகரிப்பு. 


இருசக்கர வாகனங்களும், கட்டண உயர்வுக்கு தப்பவில்லை. 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை கட்டண உயர்வு இல்லாமல், பழைய கட்டணமான ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஏற்கனவே பழைய கட்டணம் ரூ.30. இப்போது புதிய கட்டணம் ரூ.35, 24 மணி நேரத்திற்கான பழைய கட்டணம் ரூ.95. இப்போதைய கட்டணம் ரூ.100. இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது, பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


முன்னறிவிப்பும் இல்லாமல்


சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வாகனங்கள், பிக்கப் பாயிண்ட், கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, மல்டி லெவல் கார் பார்க்கிங் இரண்டாவது தளத்திற்கு மாற்றப்பட்ட போதும், இதைப்போல் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது. இதை அடுத்து விமான பயணிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, இதனால் தொடர்ந்து கடும் அவதி அடைந்து வருகின்றனர். விமான பயணிகள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில், விமான நிலைய செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் இப்போது திடீரென எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல், பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் நிலவுகின்றன. 


இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணம் கடந்த 2022 டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலைகளில் இருந்து அமலுக்கு வந்தது. தனியார் ஒப்பந்த நிறுவனம், இந்த பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை செயல்படுத்தி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த தனியார் நிறுவனத்திடம், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை ஒப்படைக்கும்போதே, 2 ஆண்டுகளுக்குப் பின்பு, கட்டணத்தை சிறிது அளவு, உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான் இந்த சிறிய அளவு கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வந்த போதே, 2 ஆண்டுகளில், இந்தப் பார்க்கிங் கட்டணத்தில், சிறிதளவு மாற்றம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதுதான். எனவே இப்போது முன் அறிவிப்பு இல்லாமல் கட்டணம் உயர்வு என்பது சரியல்ல என்று கூறுகின்றனர்.