சவுதி அரேபியாவில் இருந்து மலேசிய நாட்டுக்கு சென்ற விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பெண் பயணி, திடீரென நெஞ்சு வலியால் துடித்ததால், விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

 

நடுவானில் மாரடைப்பு

 

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து, மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு  சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானம், 378 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த ஜமீலா பிந்தி (58) என்ற பெண், அவரின்  குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேருடன், அதே விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஜமீலாபிந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். இதை அடுத்து அவருடன் வந்த குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர், விமான பணிப்பெண்களிடம் அவசரமாக தெரிவித்தனர். உடனே ஜமீலா பிந்திக்கு, விமானத்திற்குள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. 



 

அவசரம் அவசரமாக தரையிறக்கம்

 

இதையடுத்து விமானி, உடனடியாக ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் விமானம், சென்னை வான் வெளியை கடந்து சென்று கொண்டிருந்து. உடனே விமானி அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக, விமானத்தை அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லி தலைமை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டனர். அங்கிருந்து  உடனடியாக விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கும் தேவையான  ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டனர்.

 

அவசர மருத்துவ விசா

 

இதையடுத்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், விமானத்திற்குள் ஏறி பயணியை  பரிசோதித்தனர். அவரை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ஜமீலா பிந்தி  மற்றும் அவருடன் வந்த இரண்டு பயணிகள் ஆகியோருக்கு அவசரகால மருத்துவ விசாக்கள்  வழங்கினர். 




அதன்பின்பு மூன்று பேரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கி, சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜமீலா பிந்தியை  சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து மற்ற 375 பயணிகளுடன், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.