தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்த ஓ பன்னீர்செல்வம், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அதிமுகவில் இருந்து நீக்கிய பிறகு அதிமுக உரிமை மீட்பு குழு மூலம் மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் பணியிலும் செயல்பட்டு வருகிறார். இதற்காக அவ்வப்போது சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று வருகிறார். அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாலை மதுரையிலிருந்து, விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.


காணாமல் போன செல்போன்


இதனைத் தொடர்ந்து காரில் தனது வீட்டிற்கு புறப்பட சென்றபோது, உடைமைகளை சோதனை செய்தபோது செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது. செல்போன் இல்லாததை தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தனது உதவியாளர் மூலம், தகவல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் விஐபி அறையில் செல்போனை மறந்து வைத்திருக்கலாம் என பன்னீர்செல்வம் கூறினார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக சென்னை விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். 


வி.ஐ.பிகள் அறையில் தேடியபோது செல்போன் இல்லாததால் உடனடியாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பயணித்த விமான நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஊழியர்கள் மூலம் தேடினர். விமானத்தில் தேடிய போது அவரது இருக்கையில் செல்போன் இருப்பதை விமான ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.


நடைமுறைகளை பின்பற்றிய அதிகாரிகள்


இதனை அடுத்து விமான ஊழியர்கள் விமான நிலைய மேலாளர் இடம் செல்போனை ஒப்படைத்தனர். விமானத்தில் தவறவிட்ட பொருட்களை திரும்ப பெற சில நடைமுறைகள் உள்ளதால், முன்னாள் முதலமைச்சர் பயணித்த விமானத்தின் போர்டிங் பாஸ், மற்றும் தொலைந்த பொருட்களை யாரிடம் கொடுக்க வேண்டும் என்பதற்கான சான்று உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும் என மேலாளர் பன்னீர்செல்வம் தரப்படும் தெரிவித்தனர்.


மீண்டும் செல்போன் ஒப்படைப்பு


இதனைத் தொடர்ந்து போலீசார் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் போர்டிங் பாஸ் மற்றும் அவரது கையெழுத்து ஆகியவற்றை வாங்கிச் சென்றனர். உடனடியாக செல்போனை திருப்பி தர முடியாது என்பதால் வீட்டிற்கு செல்லுங்கள் அங்கு வந்து தருகிறோம் என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சென்றார். அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகு, ஒரு மணி நேரம் கழித்து அவரது செல்போன் அவரது வீட்டிற்கு கொடுத்து அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.