சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு, ஆக்ஸிஜன் சிகிச்சை அளித்து, மூச்சுத் திணறலை குணப்படுத்திய பின்பு, அந்த விமானம், சென்னையில் இருந்து 290 பயணிகளுடன், இன்று அதிகாலை, மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.

Continues below advertisement

மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்

சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இருந்து, மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு, சுமார் 290 பயணிகளுடன், மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு புறப்பட்டு மலேசியா நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

இந்த விமானம் நேற்று நள்ளிரவு சென்னை வான்வெளியை கடந்து நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த, பெண் பயணி ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பெண் பயணி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு துடிதுடித்தார். 

Continues below advertisement

கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல்

உடனே பணிப்பெண்கள், அந்த பெண் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, தலைமை விமானிக்கு தகவல் தந்தனர். இதை அடுத்து தலைமை விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கி, பெண் பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அப்போது விமானம் சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டு இருந்ததை அறிந்த விமானி, சென்னை விமான நிலைய வான் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்து, அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதால், விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதிப்பதோடு, மருத்துவ குழுவை ஏற்பாடு செய்யவும் கோரினார். 

உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு வரை அதிகாரிகள், மனிதபிமான அடிப்படையில், விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதி அளித்தனர். இதை அடுத்து அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 4.45 மணிக்கு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. 

காப்பாற்றிய மருத்துவர்கள்

உடனே விமான மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு கொண்டிருந்த பெண் பயணியை பரிசோதனை செய்தனர். உடனே ஆக்சிஜன் தேவைப்பட்டதால், ஆக்சிஜனை வழங்கினார்கள். ஆக்சிஜனை வழங்கிய சிறிது நேரத்தில், பெண் பயணி சகஜ நிலைக்கு திரும்பினார். அவர் சாதாரணமாக சுவாசிக்க தொடங்கினார். மனிதாபிமான அடிப்படையில், மருத்துவ உதவி வழங்கி காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் மற்றும் பயணிகள் நன்றி தெரிவித்தனர். 

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 5.40 மணிக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.