சிங்கப்பூரில் இருந்து விமான மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.88 லட்சம் மதிப்புடைய 789 கிராம் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவருமே புதுமுக கடத்தல் குருவிகள். முதல் முறையிலேயே, சுங்கத்துறையிடம் சிக்கிவிட்டனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை
சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி, சோதனைகள் நடத்தினர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இரண்டு பயணிகள், சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு போய்விட்டு, திரும்பி வந்தனர். அவர்கள் இருவரும் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் இருவரும், முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள்.
உள்ளாடைக்குள் சிக்கிய தங்கம்
இதையடுத்து இரண்டு பேர் உடைமைகளை பரிசோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை கலைந்து முழுமையாக பரிசோதித்தனர். அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டி, மற்றும் தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இருவரிடம் இருந்து, 781 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.88 லட்சம். அதோடு அந்தப் பயணிகள் இருவரையும், சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்த போது, அவர்கள் இருவருமே, முதல் முறையாக வெளிநாடான சிங்கப்பூருக்கு சென்று விட்டு, திரும்பி வந்துள்ளனர்.
எனவே தங்கம் கடத்தும் கும்பல், குருவிகளாக பயன்படுத்துவதற்கு, இதைப்போல் புதிய முகங்களை தேர்வு செய்து, அவர்கள் மூலமாக தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் கடத்தல் குருவிகள் இருவரும் முதல் முறையிலேயே, சுங்கத் துறையிடம் சிக்கி உள்ளனர். பிடிப்பட்ட 2 கடத்தல் குருவிகளிடம், தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களை கடத்தல் குருவிகளாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்த முக்கிய நபர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.