விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பலூனை கைப்பற்றி, பலூனை பறக்க விட்டிருந்த, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி குழுவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை. இதனால் விமான சேவைகள் பாதிப்பு ஏற்படவில்லை.
காற்றில் பறந்து வந்த மிகப்பெரிய மஞ்சள் நிற பலூன்
சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிக்குள் நேற்று மாலை 4.20 மணி அளவில், காற்றில் பறந்து வந்த மிகப்பெரிய மஞ்சள் நிற பலூன் ஒன்று, விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில் வந்து விழுந்தது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்களில் இந்த காட்சியை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விமான நிலையய பாதுகாப்பு அதிகாரிகள், விமான பாதுகாப்பு பிரிவான பி சி ஏ எஸ் அதிகாரிகளுக்கு அவசரத் தகவல் கொடுத்தனர்.
நைலான் கயிறு
இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாவது ஓடு பாதைக்கு விரைந்து சென்றனர். ஓடுபாதையில் கிடந்த சுமார் ஐந்து அடி விட்டமுடைய ராட்ஷச பலூனை ஓடுபாதையில் இருந்து அகற்றினர். அந்த மஞ்சள் நிற, பெரிய பலூன், நீளமான நைலான் கயிறுடன் வந்து விழுந்து கிடந்தது. அந்த பெரிய பலூன், நைலான் கயிறு ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
வானில் பறக்க விடப்பட்ட பலூன்
அதன் பின்பு பலூனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விளம்பரத்துக்காக, வானில் பறக்க விடப்பட்ட பலூன் என்று தெரியவந்தது. அந்த பலூனின் நைலான் கயிறு அறுந்து, காற்றில் பறந்து வந்த பலூன், சென்னை விமான நிலைய ஓடுபாதைக்குள் வந்து விழுந்து உள்ளது என்று தெரிய வந்தது.
இரண்டாவது ஓடு பாதை
ஆனால் அந்த நேரத்தில் விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில், விமானங்கள் எதுவும் இல்லை. பொதுவாக பகல் 2.30 மணியிலிருந்து நான்கு முப்பது மாலை 4.30 மணி வரையில், இரண்டாவது ஓடு பாதையில், அதிகமாக விமானங்கள் இயக்கப்படுவது கிடையாது. அந்த நேரத்தில் கோவை, கொச்சி, டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த 4 விமானங்கள், முதல் ஓடு பாதையில் வந்து, தரை இறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும், முதல் ஓடுபாதையை பயன்படுத்தியதால், இரண்டாவது ஒரு பாதை காலியாக இருந்தது.
கேலோ இந்தியா விளையாட்டு
இதனால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அதைப்போல் விமான சேவைகளுக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், கேலோ இந்தியா விளையாட்டு நிர்வாகக் குழுவினருக்கு, தகவல் கொடுத்து, அவர்களிடம் பலூனை ஒப்படைத்தனர்.ஆனாலும் இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.