இந்தியாவில் உலகத் தரத்தில் உள்ள விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையம் முக்கியம் வாய்ந்தது. நாட்டிலேயே பரபரப்பான மற்றும் சிறந்த விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில வருடங்களாகவே கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
எந்நேரமும் பரபரப்பாக இயங்கி வரும் சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து தங்கம், கரன்சி கடத்தப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த வகையில் பயணியிடம் இருந்து 60.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பிஐபி தகவல் வெளியிட்டுள்ளது.
[tw]
[/tw]
[/tw]
ஷார்ஜாவிலிருந்து 17ஆம் தேதி அன்று சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரஹ்மான் உசேன் என்பவரிடம் இருந்து 37,13,888 லட்சம் மதிப்புள்ள 606 கிராம், 24 கேரட் சுத்த தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த தங்கம் மாற்றியமைக்கப்பட்ட செல்போன்களுக்குள் மறைத்துக் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் 475 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம், மின்கல வாகனம் ஓட்டுநரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தங்கம் கொழும்புவில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் அடையாளம் தெரியாத பயணி ஒருவர், அந்த ஓட்டுநரிடம் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், மேற்கண்ட இரு சம்பங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்