சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.


விமான சாகச நிகழ்ச்சி:


 

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இன்று சென்னை மெரினாவில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 90க்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் 5 பேர் உயிரழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 





 

 

நெரிசலில் சிக்கிய மக்கள்:


 

விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க 15 லட்ச மக்கள் வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.  போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால், மெரினா கடற்கரையில் இருந்து தங்கள் வீடுகளை நோக்கி படையெடுத்தனர். ஆனால், சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர்.சென்னை வேளச்சேரி ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ நிலையம், சென்னை ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ரயிலில் இடம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

 





இதேபோன்று சாலை முழுவதும் வாகன நெரிசலுடன் காணப்படுகிறது. கூடுதல் ரயில்கள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கி இருக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதேபோன்று போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவலர்கள் விரைவாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பல்வேறு இடங்களில் பேருந்து கிடைக்காததால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.