சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் 5 வயது குழந்தை படுகாயமடைந்தது. இது அப்பகுதியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


என்ன நடந்தது..? 


சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி வருபவர் ரகு. இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது குழந்தை சுதஷாவுடன் பூங்காவில் உள்ள ஒரு அறையில் வசித்து வருகிறார். 


இந்த பூங்காவில் அப்பகுதி மக்கள் வாக்கிங்க் செல்வதற்கும் விளையாடுவதற்கும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று ரகு தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிகாக விழுப்புரம் சென்றுள்ளார். இதனிடையே அந்த பூங்காவிற்கு அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு வளர்ப்பு நாய்களை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு வாக்கிங் வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த ரகுவின் 5 வயது மகளை இரண்டு நாய்களும் கடித்து குதறியுள்ளன. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த தாய் சோனியாவையும் அந்த நாய்கள் தாக்கியுள்ளன. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நாய்களிடமிருந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 


சிறுமியை காப்பாற்றிய தாய் சோனியாவையும் புகழேந்தியின் இரண்டு வளர்ப்பு நாய்களும் கடித்து குதறின. நாய்கள் கடித்ததின் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். புகழேந்தியின் வளர்ப்பு நாய்கள் இரண்டும் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ளவர்களை கடித்துள்ளதாக புகார் இருக்கிறது. பாதுகாப்புக்காக நாய்களின் வாயில் கவசம் அணியாமல் பூங்கா அழைத்து வந்ததே விபரீதத்துக்கு காரணம் என அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 


இதனிடையே நாய்களின் உரிமையாளர் புகழேந்தி நாய்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் போலீசார் உரியாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தைக்கான செலவை தானே ஏற்றுக்கொள்வதாக உரிமையாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


நாயின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு: 


இந்த கொடூர தாக்குதலுக்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் புகழேந்தியை விசாரணைக்காக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி வரலட்சுமி மற்றும் அவரது மகன் வெங்கடேஷன் ஆகிய மூவரின் மீது பிறரை கடித்தல் அல்லது தீங்கு விளையவித்தல் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


வீட்டில் இருந்தாலும் தெருவில் இருந்தாலும் பிராணிகளிடமிருந்தும் விலங்குகளிடம் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது நாம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதற்கான முறையாக சிகிச்சையை அளித்து அவற்றை நம் கட்டுப்பாட்டில் வைக்க என்ன செய்ய வேண்டுமே அவற்றில் முழு கவனம் செலுத்துவது அவசியம் என்பதையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 


பொதுவாக, வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து வரும்போது வாயில் கவசம் அணிந்து கூட்டி வர வேண்டும். இதனால், பிறருக்கு எந்தவொரு தீங்கும் நிகழாது. ஆனால், இதை எந்த ஒரு வளர்ப்பு நாயின் உரிமையாளர்கள் பின்பற்றாததே இத்தகைய கொடூர தாக்குதல் நிகழ்வதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.