சென்னை செங்குன்றம் அருகே கிராண்ட் லைன் கரிகால் சோழன் நகரை சேர்ந்தவர் 65 வயதான நாகன். இவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவர் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். ஆந்திர மாநிலம், தடாவை சேர்ந்தவர் 50 வயதான அற்புதம்மாள். இவர் செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பழ வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், அடிக்கடி வெளியூர் செல்வதற்காக, நாகன் பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றபோது, அற்புதம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதையடுத்து, அற்புதம்மாளை தன்னுடன் தங்க வைத்துக்கொள்ள முடிவெடுத்த நாகன், வீட்டுவேலை செய்வதற்காகவும், உடல்நலம் பாதித்த மனைவியை கவனித்துக் கொள்வதற்காகவும் வீட்டிற்கு அழைத்துசென்று தங்க வைத்தார்.
வாய்த்தகராறு :
கடந்த 25ம் தேதி இரவு, குடிபோதையில் நாகனுடன் வாய்த்தகராறில் ஈடுபட்ட அற்புதம்மாள், அவர் வாங்கி கொடுத்த செல்போனை தூக்கி எறிந்து உடைத்தார். இதனால், ஆத்திரமடைந்த நாகன் அற்புதம்மாளை சரமாரியாக அடித்து, உதைத்து, கழுத்தை நெரித்துள்ளார். அதில், மயங்கிய அவரை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். பின்னர், மறுநாள் காலையில், செங்குன்றம் காவல்துறையினரிடம் தனது வீட்டில் வேலை செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், அற்புதம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நாகனை பிடித்து விசாரித்தபோது, அற்புதம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், நேற்று நாகனை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடவே, நாகனை சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை என, நாடகமாடிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றப்பட்ட மது! காரில் வன்கொடுமை - செங்கல்பட்டில் செவிலியருக்கு கொடூரம்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்