சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, 21 புறநகர் ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்களை நம்பி இருக்கும் ஏராளமான பயணிகள்
சென்னையின் மிக முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. இவற்றில் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். அதனால், ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் பெருமளவில் பயணிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, அவ்வப்போது சில வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது பொன்னேரி - கவரப்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரயில்கள் ரத்து விவரத்தின்படி, பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை(மே 24) மற்றும் 26-ம் தேதிகளில், மொத்தம் 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
2 நாட்கள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை கடற்கரை - எண்ணூர் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும், மொத்தமாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால், ரத்து செய்யப்பட்டள்ள ரயில்களில் பயணிக்கும் பயணிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.