நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றி மக்கள் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.
சென்னையை அடுத்து அமைந்துள்ள குரோம்பேட்டை அருகே அமைந்துள்ளது ஹஸ்தினாபுரம். இந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு வந்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரும் தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாணவி சென்று கொண்டிருந்த சாலையில் பொழிச்சலூர் முதல் ஹஸ்தினாபுரம் வரை செல்லும் 52 ஹெச் என்ற அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக 12-ஆம் வகுப்பு மாணவி மீது பேருந்து மோதியது. இதில், படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து மோதியதில் மாணவி உயிரிழந்ததை கண்ட அரசுப்பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றார். தப்பியோடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 12-ஆம் வகுப்பு மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மாணவியின் பெயர் லட்சுமிஸ்ரீ என்று தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்