தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்

 

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் விஜய் கொடி மற்றும் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மக்கள் பணியை திறம்பட செயல்பட வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றி பெற்ற அனைவருக்கும் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தார் . வெற்றி அடைந்தவர்களை மட்டுமில்லாமல் தோல்வி பெற்றோர்களிடமும் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.



 

நகர்புற தேர்தல்

 

 

தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கெனவே தொடங்கியது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர்.

 






வேட்புமனு தாக்கல்

 

 

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிட விரும்பும் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் விருப்ப மனு பெற்று இருந்தனர். அதன் அடிப்படையில் மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடுபவர்கள் பட்டியலே தீவிரமாக தயாரித்து வைத்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதனடிப்படையில்  புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 17 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



 

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராதிகா பார்த்தசாரதி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  வேட்புமனு தாக்கலின் போது ஏராளமான விஜய் ரசிகர்கள் விஜய் கொடி பொருத்தப்பட்ட, கொடிகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதேபோல் மதுராந்தகத்தில் இரண்டு இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மதுராந்தகம் நகராட்சியில் 12-வார்டு பெருமாள் ,13 வார்டு  ஐயப்பன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஊர்வலமாக வந்த விஜய் மக்கள் கட்சி இயக்கத்தினர். தளபதி விஜய் வாழ்க வருங்கால முதல்வர் தளபதி விஜய் வாழ்க என கோஷம் எழுப்பினர்.