செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நபருக்கும், மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
முன்னதாக நேற்று மாலை இரு வீட்டார் சூழ வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது. மேடையில் மணமகளுடன் நின்ற மணமகன் தகராறு செய்து கொண்டிருந்ததாகவும், அனைவரிடமும் அநாகரிமாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் மாப்பிள்ளை இடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது பெண் வீட்டார் விசாரித்ததில் மாப்பிள்ளை குடி போதையில் இருந்தது. இதனை அடுத்து மாப்பிள்ளை வீட்டாரிடம் பெண் வீட்டார் சண்டையிட்டு உள்ளனர்.
பின்னர், பெண் வீட்டார் சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடத்தியதில், மேடையில் பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பெண் வீட்டார் பலரிடம் மாப்பிள்ளை தகராறில் ஈடுபட்டதாகவும், திருமணம் ஆவதற்கு முன்னதாகவே ,போதையில் ரகளையில் ஈடுபடும் இந்த இளைஞருடன் எங்கள் வீட்டு பெண்ணை கட்டிக் கொடுக்க முடியாது, என்று பெண் வீட்டார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் திருமணத்தை நிறுத்திவிட்டு திருமணத்திற்காக செய்யப்பட்ட செலவு மற்றும் அணிவிக்கப்பட்ட மோதிரம் நகை உளித்தவற்றை திரும்ப கேட்டுள்ளனர். இதனை அடுத்து மாப்பிள்ளைக்காக பெண் வீட்டார் சார்பில் செய்யப்பட்ட நகைகள் திருப்பக் கோர்க்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது போதையில் இருந்ததால் திருமணம் நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.