சென்னை புறநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகர் கோயிலாக திருப்போரூர் கந்தசாமி உள்ளது. மிகவும் புகழ் பெற்ற கோயில் என்பதால், ஏராளமான பக்தர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் முருகருக்கு உரிய நாட்களில் சாமி தரிசனம் மேற்கொள்ள வருவது வழக்கம். முருகருக்கு பல்வேறு வேண்டுதல்களை வேண்டி காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. 


திருப்போரூர் கந்தசாமி கோயில்


இதில் பக்தர்கள் தாலி பொட்டு, கண்மலர், வேல், நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப நிரப்பி காணிக்கை செலுத்துவார்கள். ஆறு மாதங்கள் கழித்து இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டது.


இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டு பணம் என்னப்பட்டது. இதில் 52 லட்சம் ரூபாயும் , 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.


ஐபோனால் ஏற்பட்ட பிரச்சனை


பணம் எண்ணிக் கொண்டிருந்தபோது உண்டியலில் விலை உயர்ந்த ஐபோன் கிடைக்கப்பெற்றுள்ளது. அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என தெரியவந்தது. சென்னை சி.எம்.டி. ஏ நிர்வாகத்தில் தினேஷ் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே தினேஷ் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த போது, பணம் போட முயன்ற போது செல்போன் உண்டியலில் விழுந்துவிட்டதாக கோயில் நிர்வாகத்திடமும், அறநிலையத்துறை இடமும் புகார் அளித்திருந்தார்.


முருகனுக்கே சொந்தம்


இதனை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரும் உண்டியல் என்னும் இடத்திற்கு வந்து செல்போனை பெற முயன்ற போது, கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் வேறு செல்போனுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.


தொடர் சர்ச்சை 


இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும், பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. உண்டியலில் போடப்பட்ட பணம் இந்து அறநிலைத்துறைக்கு தான் சொந்தம் என ஒரு தரப்பும், தவறுதலாக விடப்பட்ட பொருட்களுக்கு எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என மற்றொரு தரப்பும் சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தினர். இந்தநிலையில் தற்போது திருப்போரூர் கந்தசாமி முருகர் கோயில் உண்டியலில் கிடைத்த ஐபோன் விடப்பட்டுள்ளது. 


அமைச்சர் சொன்னது என்ன ?


இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு தெரிவித்ததாவது: உண்டியலில் காணிக்கை போட்டபோது தவறுதலாக தினேஷ் என்பவரின் கைபேசி உண்டியலில் விழுந்துவிட்டது. இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தை ஆய்வு மேற்கொண்டதில், உண்டியலுக்கு வருகின்ற பொருட்களில் பணத்தை தவிர்த்து பிற பொருட்கள் அனைத்தும், திருக்கோவிலுக்கு சொந்த கணக்கில் வரவேற்கப்பட்டு. 


அதன் பிறகு அந்த பொருட்கள் ஏலத்தில் விடப்படும். அந்த வகையில் ஏலம் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, செல்போன் ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்டபோது செல்போனின் உரிமையாளர் தினேஷ் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். இதனைத் தொடர்ந்து செல்போன் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. உங்களுடைய பத்து நாள் கேள்விக்கு நேற்று திராவிட மாடல் அரசு, முடிவினை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.