தொடர் விடுமுறை காரணமாக சென்னை ஜி.எஸ்.டி., சாலையை பயன்படுத்த வேண்டாம் என செங்கல்பட்டு காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், இன்று மதியம் முதலே சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி படையெடுக்கும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

போக்குவரத்து நெரிசலில் ஜி.எஸ்.டி., சாலை 

தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இதனால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இன்று மாலை மற்றும் இரவு ஆகிய வேலைகளில், மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பாலம் கட்டுமான பணிகள் 

பொதுவாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை கூட்ரோடு பகுதியில், பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுவாகவே தினமும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களும் இந்த பகுதியை கடந்து செல்ல அரை மணி நேரத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

போக்குவரத்து மாற்றம் 

இந்தநிலையில் செங்கல்பட்டு புக்கத்துரை கூட்ரோடு பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகள் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை : செங்கல்பட்டு மாவட்டத்தில் NH-32 (GST சாலை)-ல் புக்கத்துறை மற்றும் படாளம் சாலை மேம்பால கட்டுமானம் மற்றும் சந்திப்புகளில் தென் சாலை மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், தொடர்விடுமுறை பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். 

எனவே, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ECR, GWT போன்ற மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொண்டு பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என செங்கல்பட்டு காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.