தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவருடைய மகன் செந்தில் வயது 40. இவருக்கு திருமணம் ஆகி பத்து வயதில் ஒரு மகனும், எட்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செங்கல்பட்டு அடுத்துள்ள திம்மாவரம் பகுதியில் வசித்து வருகிறார்.

 



 

இருசக்கர வாகன விபத்து 

 

இந்த நிலையில் நேற்று செந்தில் வழக்கம் போல மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு 10:30 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு, அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான கண்ணன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மறைமலை நகரில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது செங்கல்பட்டு -  காஞ்சிபுரம் பிரதான சாலையில், திம்மாவரம் என்ற பகுதியில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பொழுது செந்தில் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் கால் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வெளியேறி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



 

சிகிச்சை பலனின்றி

 

இதன் அடுத்து கண்ணன் மற்றும் செந்தில் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை செந்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் எதிரே வாகனத்தை ஒட்டி வந்தது வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த  எழிலரசன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.



 

வழக்கு பதிவு

 

இதுகுறித்து தகவல் அறிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்த செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உத்திரவாதம் அளித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட காவலர் மீது, செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர்வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவத்தால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.