செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருக்கு வயது 72. மதுராந்தகம் பகுதியிலேயே உடற்பயிற்சிக் கூடம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். சிறுவயது முதலே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட இவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து 72 வயதிலும் கட்டுடலுடன் காணப்படுகிறார். பல போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ஆசிய அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டிக்கு 60 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 



 


மே மாதம் 22-ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கு கொண்டு  தேர்ச்சி பெற்றுள்ளார். வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை மாலத்தீவில் நடைபெறும் 54-வது ஆசிய ஆணழகன் போட்டிக்கு ரத்தினம் தகுதி பெற்றுள்ளது மதுராந்தகம் பகுதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ரத்தினம் கூறும்போது, ”தனக்கு ரோல்மாடலாக தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். உடல் ஆரோக்கியம் குறித்த சைலேந்திரபாபுவின் சமூகப் பதிவுகள் தன்னைப் பெரிதும் கவர்ந்ததாகக் கூறுகிறார். வாய்ப்பு கிடைத்தால் டிஜிபியை சந்தித்து வாழ்த்து பெறப்போவதாகவும் ரத்தினம் கூறினார். 

 



 


ஆசிய ஆணழகன் போட்டிக்குத் தேர்வாகி வந்த ரத்தினத்திற்கு, மதுராந்தகம் பகுதிவாழ் மக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். மாலத்தீவை தொடர்ந்து தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியிலும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு பிரிவில் தினம் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பது கூடுதல் தகவலும் வெளியானது. இவரது சாதனை குறித்து இவருடைய உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் கூறும்போது, தங்களது மாஸ்டர் ரத்தினம் கண்டிப்பாகப் போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் சார்பாக தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் குறிப்பாக மதுராந்தகத்திற்கும் பெருமை சேர்ப்பார் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாகக் கூறுகின்றனர்.

 



இதே போட்டிக்கு, 50 முதல் 60 வயது வரை உள்ள பிரிவினரில், 80 கிலோ எடைக்கு மேல் உள்ள பிரிவில், காவல்துறையைச் சேர்ந்த ஸ்டீஃபன் ஜி.ஆர்.ஜோஸ் என்பவரும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 





இது பற்றி நமது செய்தி மூலம் அறிந்துகொண்ட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, 72 வயது ஆணழகன் ரத்தினத்தை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர்  பாராட்டினார்.